Saturday, May 19, 2012

யாழ்ப்பாணம் சிலிக்கன் பள்ளத்தாக்காகுமா? அது ஒரு கனவுலக மாயை!

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் வலி(Silicon Valley) ஆக்கப் போகின்றோம் என்று ஒரு சிறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர் இக்கருத்து யாழ் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.தமது கல்வியை தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் முடித்துக்கொண்டு கூடிய ஊதியத்துடன் வெளிநாட்டு பல்தேசியக் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாட்டில் குடியுரிமை பெற துடிக்கும் வாலிபர்களாக இருக்கின்றனர். ஒரு சில தூர நோக்குடையவர்கள் இல்லாமலும் இல்லை.

நாட்டில் போர் நடைபெற்ற வேளையிலோ அதன்பின்னரான காலங்களிலோ களத்தில் நின்று பிரதேசத்தின் அபிவிருத்தியிலோ தொழில்நுட்ப முன்னேற்றத்திலோ தமது பங்களிப்பினை செய்திருக்காதவர்களாகவே அவர்களில் பலர்; காணப்படுகின்றனர். தமது நலன்களை கருத்தில் கொண்டு இயங்கிய இவர்கள் யாழ்ப்பாணத்தினை அடுத்த சிலிக்கன் வலியாக கனவு காண்பதன் நோக்கம் என்ன?. இன்று யாழ்ப்பாணம் ஏன் வடக்கு கிழக்கு தகல்தொழில்நுட்ப ரீதியில் இந்த அளவுக்காவது முன்னேறியிருப்பதற்கான முக்கிய பங்கு இங்குள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர்களையே சாரும்.

தமது உடல்; உள மற்றும் பணத்தினையெல்லாம் தமது கனவுகளை தொலைத்து பிரதேசத்தில் தாய்நாடு என்ற பற்றுதலோடு புதிய விடயங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அடிமட்ட அறிவில் இருந்த மக்களை வெளிமட்ட மக்களின் தொழில்நுட்பங்களுடன் இணைத்திருந்தவர்கள் அவர்களே. அடிப்படை தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்;தவர்களும் அவர்களே! அவர்களுக்கு இன்று வெளிநாடுகளில் வலம் வரும் தொழில்நுட்பங்கள் பற்றி தெரியாதததென்றில்லை. சிலிக்கன் வலி ஒன்றை உருவாக்கும் முறைகளை புரியாதவர்களும் அல்லர்.

வலிகளை சுமந்த எமது மக்கள் அந்த வலிகளில் இருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சிலிக்கன் வலி பற்றி சிந்திப்பதில் அர்;த்தமில்லை என்ற நிலையில் தான், முதலில் அடிப்படைக்கட்டமைப்புக்ள் அடிப்படைத் தகவல்தொழில்நுட்ப அறிவு அதனோடிணைந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப நுகர்வு வழங்குகை போன்ற நிலைகளில் சிறிது சிறிதாக படிப்படியாக காலடி எடுத்து வைக்கின்றனர்.

வலிசுமந்த வாரத்தை நினைவு கூரவே வக்கில்லாத உரிமை மறுக்கப்பட்ட மக்களிடம் சிலிக்கன் வலிபற்றி கதைப்பது எந்த அளவிலும் நியாயமானதொன்றாக அமையமாட்டாது. போராடிக்கொண்டிருந்த எம்மினமக்கள் தகவல்தொழில் நுட்ப புரட்சியிலும் குறிப்பிடத்தக்களவு புரட்சிகளை செய்துதான் இருந்தார்கள்

பொதுமக்களுக்கான அல்லது ஒரு தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிப்படைக்கட்டமைப்புகளை சாதாரண பொது அமைப்புக்களோ தனியார் நிறுவனங்களோ வழங்கி விடமுடியாது. அரசு மனம் வைக்கவேண்டும் அதற்கு நாட்டின் பொருளாதாரமும் இடம் கொடுக்கவேண்டும்.
இப்பத்தியை எழுதிக்கொண்டிருகும்போது எனது மென்பொருள் நிறுவனத்தில் மின்பிறப்பாக்கி தான் மின்சாரத்தினை வழங்கிக்கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில் யாழ்ப்பாணத்தின் 75 வீதமான பிரதேசங்களில் இன்று காலை 8.30 தொடக்கம் 6.30 வரை மின்சாரம் இல்லை. நிறுவனங்கள் பல மூடப்பட்டு கிடக்கிறது. சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் மின்சாரம் இன்றி இயங்காமல் கிடக்கின்றன. கைத்தொலைபேசிகள் பல மின்கலம் செயலிழந்து மின்னேற்றத்திற்காக எப்போ 6.30 மணி வரும் என்று காத்துக்கிடக்கின்றன. பலர் குளிக்காமல் குந்தியிருக்கிறார்கள். இது இன்று மட்டுமல்ல ஒன்று விட்டு ஒருநாள் நடைபெறும் நாளாந்த செயற்பாடு. அவசரத்துக்கு வீதியில் வாகனம் ஓட்டப்போய் கிடங்கில் போய் விழவேண்டும்.
இவையெல்லாம் ஒன்றிரண்டு உதாரணங்கள் இப்படி நிறைய விடயங்களை சொல்லிக்கொண்டுபோகலாம்.

நான் மேலே குறிப்பிட்ட நபர்களுக்கு இது தெரியாமலில்லை. அப்படியாயின் எப்படி அவர்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? அவர்களும் நமது  சகோதரர்களே அவர்களால் இந்த பிரதேசம் புனித பூமியாகும்! முன்னேறிய நகரமாகும்! என்றால் எதிரப்பதற்கில்லை. அவர்கள் செய்யக்கூடாது நாங்கள் தான் செய்யவேண்டும் என்றும் இல்லை.

அப்படியாயின் அவர்களின் முயற்சியை கேள்விக்குள்ளாக்குவதற்கான காரணம் என்ன? அவர்களின் நோக்கம் என்ன? யாழ்ப்பாணம் சிலிக்கன் வலியாவதில் எனக்கு உடன்பாடில்லையா? Face Book இல் Farm Valley விளையாடும் நமது இளைஞர்களும் வயது வந்தவர்களும் சிற்றி வலி மன்னிக்கவும்! சிலிக்கன் வலியில் சிறகடித்துப்பறக்கக்கூடாதா? இல்லாவற்றுக்கும் இறுதியில் பதில் உண்டு தொடருங்கள்

இன்று யாழ்ப்பாணத்தில் என்னத்துக்கு பஞ்சமோ தெரியாது ஆனால் கருத்தரங்குகளுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் பஞ்சமில்லை. நிதி நிறுவனங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கல்வி முகவர் நிலையங்கள் உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் சுற்றுலா பயணிகள் நடைபாதை வியாபாரிகள் என ஏகப்பட்ட தரப்பினர் வருகிறார்கள் சந்தைப்படுத்தலை செய்கிறார்கள். விற்பனைகளை செய்கிறார்கள். அவர்கள் பாடசாலைகள் பல்கலைக்கழகம் எதனையும் விட்டுவைப்பதில்லை ஆனால் அவர்கள் எல்லோரும் எம்மை எமது வளங்களை சுறண்டிச் செல்வதையே முக்கிய பணியாக செய்கிறார்கள். எமது மக்களும் உற்பத்தியாளர்களாகவன்றி நுகர்வோர்களாகவே மாறிக்கொண்டிருக்கின்றார்கள். நாம் சகல துறைகளிலும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

இதற்கு ஏமாந்து கொண்டிருக்கும் எமது மக்களும் ஓரு காரணம் ஆவார்கள் ‘கலர்’ காட்டுபவர்களை கடவுளாக நினைப்பதே இதற்கு காரணம்.

கருத்தரங்கு செய்பவர்கள் இங்குள்ள மக்களை ஏதோ வேள்விக்கடாக்களாகவும் ஆதிவாசிகளாகவும் நோக்குகின்றனர். தாம் புனிதபூமியில் இருந்து வந்தவர்களாக காட்டிக்கொள்ள முனைகின்றனார் ரீசேட்டில் ஒரு “கூலிங் கிளாஸ்” காலில் விளையாட்டு வீரர்களின் சப்பாத்து சிலவேளை அரையில் ஒரு “யம்பர்” வாடகைக்கார் இவற்றுடன் வந்தால் தொழில்நுட்பம் தம்மோடு வருகிறது என்று கருதுகின்றனர். இப்பிடி பல போக்கிரிகத்தனங்கள் அவற்றினை சொல்லப்போனால் விசைப்பலகை தேய்ந்து விடும்.

நான் மேற்கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முன்பாக சிலிக்கன் வலி என்றால் என்ன என்று பார்க்கவெண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அடுத்த சிலிக்கன்வலி தங்கள் தங்கள் நகரங்கள் தான் என அடம்பிடிக்கும் கூட்டத்தினரின் கனவுகள் மெய்ப்படுமா என்றும் பார்க்கவேண்டும்.
விக்கிபீடியா இப்படி சொல்லுகிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் சான் பிரான்சிசுக்கோவின் தென் பகுதியை குறிக்கும். இங்கே சிலிக்கான் சில்லு பற்றிய ஆய்வும், புதிய கண்டுபிடிப்பும் புத்தாக்கமும் (invention), சிலிக்கான் சில்லு உற்பத்தியும் இங்கே அதிகம் நிகழ்வதால் இப்பெயரை இப்பகுதி சிறப்புப் பெயராகப் பெற்றது. 1971ல் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்னும் தொடரை “டான் கொவ்லர்” (Don Hoefler) என்னும் செய்தியாளர், “எலெக்டிரோனிக்ஸ் நியூஸ்” என்னும் செய்தித்தாளில், கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பில் முதன்முதலாகப் பயன்படுத்தினார். இன்று உயர்நுட்பம், உயர்நுட்பக்கலை என்பதைக் குறிக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் புகழ்ப்பெயர். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது புவியியல் பெயர் அல்ல. குறிப்பாகச்சொல்லப்போனால் உலகின் புகழ்பூத்த மென்பொருள் உற்பத்திநிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன.

சிலிக்கன் பள்ளத்தாக்காக ஒரு நகரம் பிரதேசம் அடையாளப்படுத்தப்படவேண்டுமாயின் என்னவெல்லாம் இருக்கவேணும் என “போல் கிரகாம்” என்பவரால் வரையப்பட்ட கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்ட காரணிகள் வருமாறு

1)ஒரு தொழில்நுட்ப சமூகத்தினை கட்டிஎழுப்ப 2 வகையான மக்கள் படை தேவை ஒன்று பணக்காரர்கள் மற்றது மேதாவிகள் ஆரம்;பத்தில் இவர்கள் மட்டும் போதும் பின்னர் மற்றவர்கள் அதற்குள் உள்ளீர்க்கப்படலாம்.

2)முதலீட்டாளர்களே முக்கியமானவர்கள் அவர்கள் இன்றி இது சாத்தியப்படாது. அதிகாரிகள் மட்டத்திலும்; இதனை சாதிக்கமுடியாது.

3)தொழிநுட்ப நிறுவனங்களின் கட்டிடங்களும் மாட மாளிகைகளும் சிலிக்கன்; பள்ளத்தாக்கு போன்றதொன்றை உருவாக்குவதில் பங்களிக்கமுடியாது. அவை அப்பள்ளத்தாக்கில் உள்ளவர்ககளால் பின்னர் உருவர்க்கப்பட்டவைகளாகவே இருக்கமுடியும்.

4)சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் குறித்த பிரதேசத்தில் இருக்கவேண்டியது அவசியம்.

5)மேற்சொன்ன பல்கலைக்கழகங்களோடு உயர்ந்த வசதிகளுடன் கூடிய சிறு சிறு நகரங்கள் அருக்pல் அவசியம் முதலீட்டாளரகள் அலுவலர்களுக்குரிய அனைத்து வசதிகள் அங்கு இருக்கவேண்டும்

6)அர்ப்பணிப்புள்ள துடிப்பான இளைஞர் சமூகம் அவசியம்

7)நேரத்தின் பயன்பாட்டினை உறுதிப்படுத்தக்கூடிய உள்ளக கட்டமைப்புக்கள் அவசியம்

8)துறைசார்ந்த போட்டியாளர்கள் அவசியம்

மேற்சொன்ன முக்கிய காரணிகளில் முதல் 1 மற்றும் 3 இனை மட்டும் தான் யாழில் ஒரளவுக்கு இருப்பதாக கருதுகின்றேன் மற்ற எதுவும் இங்கு இல்லை  அதை வைத்துக்கொண்டு யாழ்ப்hணத்தினை சிலிக்கன் வலியாக மாற்ற முயல்வது வலிமிகுந்த பணியாகும்.
உள்நாட்டுபோர் காரணமாக எமது சமூகம் புலம்பெயர்ந்தமை இதில் முக்கிய காரணியாகும். இரண்டுபட்டு போயுள்ள எமது சமூகத்தின் உறவுத்; தொடர்புகள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் இறுக்கமுற்று காணப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்களின் வெளியேற்றம் மூளைசாலிகளின் வெளியேற்றம் வெளிநாட்டு மோகம் அரசியல் நெருக்குவாரங்கள் போன்றவை இளைஞர்களின் இருப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கிக்கொண்டே இருக்கும்.  6 வது காரணி மிக மிக சவாலானது. இருக்கின்ற இளைஞர்களின் வினைத்திறனைக் கூட அந்நியச்செலாவணி அதள பாதாளத்திற்கு இட்டு செல்கின்றமையினையும் மறுக்கமுடியாது.
பல முதலீட்டாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாட்டின் முதலீடு அரசியல்களில் கப்பங்களில் சிக்கி தவிக்கையில் முதலீட்டாளர்களின் சுயாதீனம் கேள்விக்குறியே

போட்டியாளர்களைப்பொறுத்தவரை புத்தாக்கங்களை விடுத்து பிரதியாக்கமே மலிந்து காண்படுகின்றது. இது உலகில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடாகவும் காணப்படுகின்றது. இந்த நிலை மாறுவதற்கு மனங்கள் மாறவேண்டும். ஒருவரை அடித்து மற்றவர் முன்னேறவேண்டும் என்ற மனப்பாங்கு மற்றும் மற்றொருவரின் புலமைச்சொத்தை திருடும் மனப்பாங்கு அறவே ஒழிக்கப்படும் பட்சத்தில் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களை நாம் சந்திக்கமுடியும். இதனை விவரணச்சித்தித்திரங்கள் மட்டும் சாதிக்காது.

மற்றப்படி ஏனைய காரணிகள் நாட்டின் பொருளாதார அரசியல் நிலைத்தன்மையிலும் ஒருமைப்பாட்டிலும் தான் தாங்கியுள்ளது. அதனை சிறு அமைப்புக்களால் கட்டியமைத்துவிடமுடியாது.அரச இயந்திரத்தினாலேயே முடியும்.

மேற்சொன்ன கனவு காணும் தரப்பினர் தற்போது நிறைய ஊதியங்களுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களில் ஒருபகுதியினர் அதே நிலையில் இங்கு யாழ்ப்பாணத்;தில் வாழ விரும்புகின்றனர். அதற்கான முன் முயற்சியாகவே இந்த பள்ளத்தாக்கு கனவு. அவர்கள் போராடத்தயாரில்லை வெளியில் இருந்து பார்க்கும் போது ஒப்பிடும்போது யாழ்ப்பாhண மக்கள்; அவர்களுக்கு இன்னும் ஆதிவாசிகளாக தோன்றுவதில் வியப்பில்லை. தமது வீரப்பிரதாபங்களை பீற்றிக்கொள்வதற்கான களமாக கூட சிலர் எம்மை பயன்படுத்த முனைகின்றனர்.

இவர்கள் எமக்கு ஆலோசனைகள் வழங்கத் தேவையில்லை முன்மாதிரியாக மூட்டைமுடிச்சுகளுடன் இங்கு வந்து விடுங்கள் களத்தில் நீங்கள் விரும்பிய பள்ளத்தாக்கினை நீங்களே தோண்டுங்கள் யார் தடைபோட்டது? கொஞ்சம் வியர்வை சிந்தவேண்டி இருக்கும் மண்வெட்டி பிடிப்பதால் இல்ல மின்சாரம் இல்லாத வேளைகளில் வேலைசெய்யும் போதுதான்.நீங்கள் உண்மையில் திறைமையானவர்கள் ஏன் உங்கள் திறமைகளை இப்படி வீணான வெட்டிப்பேச்சுக்களில் வீணடிக்கிறீர்கள். நிச்சயம் உங்களாலும் முடியும்
ஆலோசனை கூறுவது இலகு அது நமக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து skype இல் உரையாற்றுவதன் மூலம் எதுவும் சாதித்துவிடமுடியாது. அதை ஆ என்று பார்க்க 5 பேர் வரலாம். “யு ரியுப்பில்” நிறைய தரமான தகவல்கள் உள்ளன. நீங்கள் களமாடுங்கள் ஆலோசனை தேவையானவர்கள் உங்களிடம் வருவார்கள்.செயலில் காட்டுங்கள்.

இவர்களுக்கு கள யதார்த்தம் சரியாக பிடிபடவில்லை. அதற்காகவே ஏற்கனவே மற்றவர்களால்; போராடிப் பெறப்பட்ட படிப்பினைகளை முன்னிறுத்தி தமது இலக்கினை அடைய முயற்சிக்கின்றனர். இலங்கையின் மின்னரசாங்க கொள்கைகள் வித்தியாசமானவை. இவை ஏலவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. இவை பின்பற்றப்படுவதற்கான அடித்தளவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க மீண்டும் மீண்டும் வில்லங்கமான முறைகளை புகுத்த முனைவது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவதாகவே முடியும்.

அரச நிறுவனங்களில் புதிய புதிய மென்பொருள்களை தகுந்த ஆய்வு இன்றி பிரயோகம் செய்வதில் அரசியல்வாதிகள் அதிகாரிகளும் துணைபோகின்றார்கள் என்பதும் வேதனைக்குரிய விடயம். அரசாங்கத்தின் கொள்ககைகளுக்கமைவாக கணக்கியல் தகவல்தொழில் நுட்ப கொள்கைகள் சரியாக பின்பற்றப்பட்டால் அரச இயந்திரங்களில் தனிப்பட்ட நிறுவனங்களின் செல்வாக்குகள் திணித்தல்கள் கேள்விக்குரியதே.

இதற்காக சிலிக்கன் பள்ளத்தாக்குக்கான சாத்திப்பாடுகளை முற்றாக மறுதலித்த விடமுடியாது. யாழ்ப்பாணம் ஒருநாள் நிச்சயம் (இனி வரும் 20 வருடங்களுக்குள் சாத்தியமில்லை )சிலிக்கன் வலியாக மாறுவதற்கான் ஏதுநிலைகள் இல்லாமல் இல்லை. ஏதுநிலைகள் உள்ள நகரங்கள் எல்லாம் சிலிக்கன் வலியாக மாறிவிடவும் முடியாது. அப்படிப்பார்தால் உலகத்தின் பல நகரங்கள் சிலிக்கன் வலிகள் ஆகும்.

யாழ்ப்பாணம் ஒரு வளர்ந்து வரும் கலாச்சார நகரம். ஏராளமான தொழிலதிபர்கள், சிறு முதலீட்டாளர்கள் குவிந்து கிடக்கும் நகரம். புலம்பெயர்ந்தவர்களின் வருகை தற்போது அதிகரிக்கின்றது. சிறு சிறு அளவில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் முளைக்க தொடங்;கிவிட்டன இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது யாழ்ப்பாhணம் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்காக மாறும் வாய்ப்புகள் பிரகாசமாகவே தெரிகின்றன.

அதேவேளை யாழ்ப்பாணம் இன்னும் அமைதிப்பள்ளத்தாக்காக மாறவில்லை என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் முதலீட்டாளர்களுக்கு எவ்வித அசு;சுறுத்தலும் இல்லை என்றோ வெளிநாட்டவர்களுக்கான பாதுகாப்பு குறித்தோ அடிப்படை வசதிகள் யாவும் வழங்கப்பட்டுவிட்டது என்றோ மக்கள் தங்கள் உரிமைகளுடன் வாழ்கிறார்கள் என்றோ யாரும் மார்தட்டி விடமுடியாது. மக்கள் தமது சொந்த இடங்களுக்கெ திரும்ப முடியாமல் வாடகை வீடுகளில் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். இந்நிலையில் சிலிக்கன்; பள்ளத்தாக்கு பற்றி சிந்திப்பதானது மரணவீட்டிலை சிரிப்பை தேடுவதற்கு சமம்!

யாழ்ப்பாணத்தின் வரலாறு வாழ்க்கை முறைமை மற்றும் புவியியல் அடிப்படைகளை கொண்டு பார்க்கும்போது அது கலாச்சார நகரமாக மாறுவதற்கான வாய்;ப்பே அதிகமாக உள்ளது அதேவேளை கைத்தொழில் விவசாயம் ஆகியனவும் கைவிடப்படமுடியாத துறைகள் கலாச்சார நகரத்தில் தொழில் நுட்ப நிறுவனம் நடாத்த முடியாது என்று கூற முடியாது. சிங்கப்ப10ர் போலவோ யப்;பான் சீனா  போன்ற நாடுகளில் உள்ளதொரு பல்துறை நகரமாகவோ மாற்றுவதற்கு நிறைய வாய்;ப்புக்கள் உள்ளது அதற்கு முதலில் அரசு மனம் வைக்கவேண்டும் எந்தப்பள்ளத்தாக்கும் முதலில் அமைதிப்பள்ளத்தாக்காக இருக்கவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏதாவது பொது முறை மென்பொருள் வன்பொருள் குறித்து குழு அடிப்படையில் சிந்தித்து அதனை பிரதேசத்தில் பிரயோகம் செய்யலாம் என்று கனவுப் பள்ளத்தாக்கினர்  கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் குறித்த குழு ஆய்வினை அப்படியே பிரதிசெய்து தனி நபர் மென்பொருள் உருவாக்கி காசாக்கிவிடுவார் குழுவில் புலமைகளை பகிர்ந்தவர்கள் பல்லிளித்துக்கொண்டிருப்பார்கள். தமிழனுக்கும் குழுவேலைக்கும் ஒருபோதும் சரிப்பட்டு வராது.
ஏன்னைப்பொறுத்தவரை மேற்சொன்ன முயற்சிகளின் உள்ளார்ந்த எண்ணக்கரு மடம்பிடிக்கும் முயற்சி என்றே கருதுகின்றேன். நோகாமல் நுங்கு சாப்பிடுவதற்கான வழியை தேடுவதாகவும் இருக்கலாம்

மற்றப்படி இளையவர்கள் தமது முயற்சியை தொடரட்டும் அம்முயற்சியின் ஊடாக குறைந்தது அவர்கள் மீள வந்து குறைந்த வசதிகளுடன் போராடி  தமது பிரதேசத்தின் தொழில்நுட்ப கைத்தொழில் விவாசாய கலாச்சார வளர்ச்சிக்கு தாம் சார்ந்த துறைகளின் ஊடாக ஏதாவது செய்ய முடிந்தால் வரவேற்கத்தக்கது.

சாதாரண கிராமப்புற மக்களுக்கு அறிவை வழங்கி அவர்களை அவர்களது தொழில்களை அதிக வினைத்திறனுடன் செய்ய உதவுவார்களாயின் அது நிச்சயம் நல்ல பயனைத்தரும். வெறுமனே நகரப்புறத்தில் மாணவர்களை அழைத்து ஏற்கனவே குறித்த துறைகளில் காலூன்றி உள்ளவர்களை அழைத்து விவரணசித்திரங்களைப் போட்டு இது Desktop  இது Window என்று பால பாடம் எடுப்பதில் பயனெதுவும் இருக்காது என்பது என்போன்றவர்களின் கருத்து.

உசாத்துணைகள்